×

தென் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா உள்பட: போதை பொருட்களை ஒழிக்க தொடரும் அதிரடி நடவடிக்கை

* விற்பனை, கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் ஐ.ஜி.அஸ்ரா கர்க் உறுதி

சிறப்பு செய்தி

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா உள்பட போதை பொருட்களை ஒழிக்க தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கர்க் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதனால், தென் மாவட்டங்களில் போதை பொருட்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா மற்றும் போன்ற போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை களை எடுக்கும் விதமாக காவல்துறையினரும் அதிரடியாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராக் கர்க் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவருக்கு ‘சிறப்பு பதக்கம்’ தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், தென் மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கஞ்சா விற்பனை, வளர்ப்பு, சப்ளை, பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை பிடித்து, அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஜனவரி முதல் மே மாதம் இறுதி வரை கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாவட்டத்தில் 469 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ெதாடர்பாக 917 கஞ்சா வியாபாரிகள், கடத்தல்காரர்கள் மற்றும் உற்பத்தி செய்தவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வழக்கு பதிவு செய்தல், கைது நடவடிக்கை, கஞ்சா பறிமுதல் என்பதோடு நின்றுவிடாமல் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கை தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றாவாளிகளை கண்டறிந்து அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கி கணக்குகளையும் முடக்கி, அவர்களின் பண நடமாட்டத்தை முற்றிலுமாக செயலிழக்க செய்துள்ளார் ஐ.ஜி.அஸ்ரா கார்க். மேலும், கடந்தாண்டு முதல் தற்போது வரை 13 முக்கியமான கஞ்சா வழக்குகளில், குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ₹ 14 கோடி மதிப்புள்ள அனைத்து விதமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட வழக்குகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதால் மற்ற கஞ்சா வழக்குகளிலும் இதற்கு இணையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, கஞ்சா குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்கு உரிய வங்கி கணக்குகளை குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி, முடக்கம் செய்யலாம். அதன் அடிப்படையில், மற்ற கஞ்சா வழக்குகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தும் விதமாக குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி, நன்னடைத்தைக்கான பிணையம் பெறப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பொதுவாக நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் ரவுடி மற்றும் சந்தேக குற்றாவாளிகளிடம் பெறப்படும். ஆனால், இந்த சட்டம் கஞ்சா குற்றவாளிகளுக்கும் பெருந்தும் என்ற அடிப்படையில் கடந்தாண்டு முதல் தென்மாவட்டங்களில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்டிஓ மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை என்பது குற்றவாளிகள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதில் இருந்து விலகுவார்கள்.

அதன்படி, இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் நன்னடைத்தைக்கான பிணைய பத்திரம் பெறலாம் என்பதோடு நின்றுவிடாமல் தண்டனை பெறும் குற்றவாளிகள் மீதும், நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்புரைக்கும் சமயங்களில் என்.டி.பி.எஸ் சட்டப்படி, நீதிமன்றமானது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறலாமா என்பதை அறிந்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக இந்தாண்டு தொடக்கம் முதல் மே மாதம் இறுதி வரை கடந்த 5 மாதங்களில் மட்டும் 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில் 338 கஞ்சா குற்றவாளிகள் மீது நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகப்படியாக வேறு மாநிலங்களிலிருந்து மொத்தமாக பெற்றுவருவது கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றினை கட்டுப்படுத்த விற்பனை செய்த குற்றவாளிகள் வேறு மாநிலத்திலிருந்த போதும் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர். அந்தவகையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 முக்கிய குற்றவாளிகள் வேறு மாநிலத்திலிருந்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும், கஞ்சா குற்றாவாளிகள் மீது தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மட்டுமின்றி, நிலுவையில் இருந்த பழைய கஞ்சா வழக்குகளிலும் புலனாய்வு முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு கோப்புகளை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். அதன் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும். இந்தாண்டு தொடக்கம் முதல் மே மாதம் இறுதி வரை மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில் 684 கஞ்சா வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது.

அதில், 6 வழக்குகள் வணிக அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்காகும். இதில், பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளை தொடர்ந்து ஆய்வு செய்து வழக்கின் போக்கினை கண்காணித்து வரும் காவல்துறையினர், நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளிகள் பிணையில் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வழக்குகளை கண்காணித்து நடவடிக்கையினை எடுக்கும் முயற்சிகள் தென்மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக பல வழக்குகளில் குற்றவாளிகள் பிணையில் செல்ல முடியமால் தடுக்கப்பட்டும் உள்ளனர். குறிப்பாக, கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்கும் விதமாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தலைமையில், நெல்லை காவல் ஆணையாளர் மற்றும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், நெல்லை சரக காவல்துறை துணை தலைவர்கள் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதுடன், அவர்களின் மேற்பார்வையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர நடவடிக்கையில் போதை பொருட்களுக்கு எதிரான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா சமூகத்தின் மிகப்பெரிய சீர்கேடாகும், குறிப்பாக இளைஞர்களின் உடல்நலத்தை கெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் சீர்கேட்டை சமூகத்திலிருந்து முற்றிலுமாக வேரறுக்க அனைத்து பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு அவசியம் என சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கஞ்சாவிற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* 71 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்

இந்தாண்டில் இதுவரை தென்மண்டலத்தில் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 71 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

* 2448 வங்கி கணக்குகள் முடக்கம்

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தென்மண்டலத்தில் 1316 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் சந்தேகத்திற்குரிய 2448 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

* 3200 கஞ்சா வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல்

கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் 3200 கஞ்சா வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

* 814 குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணைய பத்திரம்

இந்தாண்டு தொடக்கம் முதல் மே மாதம் இறுதி வரை கடந்த ஐந்து மாத காலங்களில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில் 814 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தை பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளன.

The post தென் மாவட்டங்களில் கஞ்சா, குட்கா உள்பட: போதை பொருட்களை ஒழிக்க தொடரும் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ganja ,Gutka ,southern ,IG ,Azra Garg ,Tamil Nadu ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு